Thursday, March 19, 2009

டி ஆர் சாதித்த கதை:

நன்றி : http://www.yarl.com/forum3/index.php?showtopic=42255

சகலகலாவல்லவர். எந்த விஷயத்தையும் முறையாகக் கற்றுக் கொள்ளாமல் தானே தெரிந்துக்கொண்டு சாதித்துக் காட்டியவர். இளையராஜா உச்சத்தில் இருந்தபோதே இவரது பாடல்களும் சூப்பர் ஹிட். ரஜினி படங்களுக்கு இணையாக இவரது படங்களும் ஓடியிருக்கின்றன. எதுவுமே தெரியாமல் வந்து எப்படி சாதிக்க முடிந்தது என்ற கேள்விக்குப் பதில் சொல்கிறார் டி.ராஜேந்தர்.

‘‘எனக்கு ரொம்ப சின்ன வயசிலேயே மேடையில பேசணும். கைதட் டல் வாங்கணும். நாலு பேர் நம்மை கவனித்துப் பாரட்டணும்னு ஆசை. மூன்றாவது படிக்கும்போது மேடையில் பேச ஆசைப்பட்டேன். ஆனா அந்த வயதில் எனக்கு மேடை கிடைக்கவில்லை. அதனால் பெஞ்ச் மீது ஏறி நின்று என் வகுப்பு மாணவர்களிடம் பேசுவேன். பேசுகிறது என்றால் சாதாரணமாய் பேசுவது அல்ல, எனக்குத் தெரிந்த எதுகை மோனையில் பேசுவேன். என் வகுப்புத் தோழர்கள் உற்சாகமாய் கை தட்டுவார்கள். அந்த கைதட்டல்தான் என்னை வளர்த்தது.

இப்படி ஆரம்பித்த இந்த ஆர்வம் கல்லூரியிலும் தொடர்ந்தது. ஆரம்பத்தில் மைலாடுதுறை ஏ.வி.சி. காலேஜில் படித்தேன். ரயிலில்தான் போக வேண்டும். ரயில் பயணம் முழுக்க ரயில் சப்தத்தத்தை மீறி என் பாட்டு சப்தம் ஒலிக்கும். அதுதான் தன்னம்பிக்கை. நான் ஏறுகிற பெட்டியில்தான் மாணவர்கள் கூட்டமும் ஏறும். காரணம், நான் தாளத்துடன் போடும் பாட்டு. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதும் இந்த ரயில் கச்சேரி தொடர்ந்தது. தினம் புதுப்புது பாடல்களைப் பாடுவேன். இது எந்த படத்துப் பாட்டு என்பார்கள். என் சொந்தப்பாட்டு என்பேன். அவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். அப்படிப் போட்ட மெட்டுக்கள் பல சினிமா பாடல்களாயிருக்கின்றன. ரயிலில் கருவாட்டு கூடையுடன் வரும் பெண்களுக்காக பாடிய பாட்டுதான், ‘கூடையில கருவாடு’. இது ஒருதலை ராகத்தில் வந்தது.

இங்கே ஒரு விஷயத்தை நான் சொல்ல வேண்டும். இப்படி ரயிலில் ஜாலி பண்ணிக்கொண்டு வந்ததால் படிப்பை கோட்டை விடவில்லை. பி.ஏ.வில் தங்கப் பதக்கம் பெற்றேன். பள்ளியிலும் எப்போதும் முதல்தான்.

இதற்குக் காரணம் எந்த விஷயத்தையும் நம்மால் செய்ய முடியும் என்று நினைத்தே தொடங்குவேன். என்னால் முடியாது என்று நான் நினைத்ததே கிடையாது. நான் மிக நன்றாகப் படித்ததால் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதச் சொல்லி என் நண்பர்கள் என்னை வற்புறுத்தினார்கள். சிலர் டாக்டரேட் பட்டத்துக்கு ஆராய்ச்சி செய் என்றார்கள். ஆனால் என் இலட்சியம் சினிமாவாக இருந்தது.

நான் டைரக்டராகப் போகிறேன் என்று சொன்னால் அவர்கள் சிரிப்பார்கள். மற்றவர்களின் கிண்டல், சிரிப்புக் கேலி பேச்சும் ஒருவனின் வளர்ச்சியைத் தடை செய்துவிட முடியாது என்பதற்கு நான் உதாரணம். அவர்களின் கேலியையும் கிண்டலையும் பொருட்படுத்தியிருந்தால் முடங்கிப் போயிருப்பேன். ஆனால் நான் முடங்குபவன் அல்ல.

மாயவரத்தில் ‘பியர்லெஸ்’ சினிமா தியேட்டர் இருக்கிறது. தியேட்டர் பக்கத்திலேயே சாக்கடை ஓடும். அந்த சாக்கடை அருகே நின்றால்தான் உள்ளே திரைப்படத்தின் சத்தம் கேட்கும். உள்ளே போய் சினிமா பார்க்க கையில் காசு இருக்காது. ஆனால், இசையையும் வசனத்தையும் கேட்க எனக்கு ரொம்ப ஆசை, அதனால் சாக்கடை அருகிலேயே நின்று கேட்டுக் கொண்டிருப்பேன். அந்த இசையை அங்கேயே பாடிப் பார்ப் பேன். இதையெல்லாம் பார்த்து என்னை லூஸ§, பைத்தியக்காரன் என்று சொல்லி யிருக்கிறார்கள். ஆனால், எனக்கு அது வருத்தமில்லை. நான் சினிமாவைக் கற்க வேண்டும். அதற்கு சாக்கடை பக்கத்தில் நிற்க வேண்டியிருக்கிறது என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு நிற்பேன்.

சினிமாவில் சேர சென்னை கிளம்பினேன். அங்கே போய் என்ன செய்யப் போகிறாய் என்று சிலர் கேட்டார்கள். ‘கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, பாடல்கள், இசை எல்லாவற்றையும் செய்யப்போகிறேன்’ என்று சொன்னதும் சிரித்தார்கள். ‘அந்தப் படத்தைப் பார்க்கிறதும் நீ மட்டும்தான்’ என்றார்கள். இன்று பாருங்கள். அப்படியா நடந்தது? உங்களை மட்டம் தட்டும் கருத்துக்களை உதாசீனப்படுத்துங்கள். தன்னம்பிக்கையுடன் இருங்கள்.

சென்னை வந்தேன். ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்துக் கொண்டிருந்தவர்கள் சிலர் எனக்கு நண்பரானார்கள். இதற்கு எங்கள் ஊர் நண்பர் ஹாரூண் உதவினார். அந்த நண்பர்கள் மூலம் சினிமா ஷ¨ட்டிங் போய் பார்க்க ஆரம்பித்தேன்.

அதுவே எனக்கு பெரிய அனுபவப் பாடமாக இருந்தது. ஏதாவது நண்பர்கள் ரூமில் தங்கிக் கொள்வேன். நடந்தே போவேன். பஸ்ஸிற்குக் காசு இருக்காது. சாப்பிடுவதற்குக் காசு இருக்காது. என்னுடைய நண்பர்கள் என்னைப் பார்த்து ‘சாப்பிட்டாச்சா’ என்று கேட்டால் சாப்பிட்டாச்சுனு சொல்வேன். அவர்கள் என் முகத்தைப் பார்த்து பரிதாபப்பட்டு சாப்பாடு வாங்கித் தருவார்கள்.

என்னுடைய சினிமா தாகம் அதிகரித்தது பாரதிராஜாவின் 16 வயதிலே வந்த பிறகுதான். அவருக்கு ஒரு எஸ்.ஏ. ராஜ்கண்ணு கிடைத்தார். நானும் நிறைய தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லிப் பார்த்தேன். ஆனால் யாரும் என்னை இயக்குநராக ஏற்றுக்கொள்ளவில்லை.

ஒருதலைராகத்திற்காக நான் கதை சொல்லாத தயாரிப்பாளர்களே இல்லை, நான் பாட்டுப்பாடி காட்டாதவர்களே இல்லை. என் நண்பர் ஹாரூண் மூலம் இப்ராஹீம் கிடைத்தார். அவரை சம்மதிக்க வைக்க ஒரு வருடம் ஆகியது. 4ம் நெம்பர் பஸ்ஸைப் பிடித்து இப்ராஹீம் ஊரான வடகரைக்கு போவேன். கதை சொல்லுவேன் அங்கிருந்து கிளம்ப ராத்திரியாகிவிட்டால், எங்கள் ஊருக்கு பஸ் இருக்காது. பதினைஞ்சு கிலோ மீட்டர் நடந்து வீட்டுக்கு வருவேன்.

சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் இப்ரா ஹீமோடுதான் இருப்பேன். அவர் வயலில் இருந்தால் நானும் அங்கு போவேன். அவர் நாற்று நட்டால் நானும் நடுவேன். நெற்பயிர் வளர்ந்தது போல் அந்தப் படத்தின் உயிரும் வளர்ந்தது.

பிறகு ஒரு வழியாக படம் எடுத்து முடித்தோம். ஆனால், ‘ஒருதலை ராகம்’ படத்தை எனக்கு போட்டு காட்டலை. படம் பார்க்கவும் கூப்பிடலை. படம் ரிலீசானது. முதல் நாள் தியேட்டரில் போய் பார்க்க கையில் காசு கிடையாது. இரண்டு நாள் கழித்துதான் படத்தைப் பார்த்தேன். இப்படி வளர்ந்தவன்தான் இந்த ராஜேந்தர்.

சமீபத்தில் ஊரிலிருந்து என் நண்பன் ஒருவன் பார்க்க வந்தான். அவன் என்னை கேலி பேசியவன். கிண்டல் செய்தவன். ‘‘டேய் மன்னிச்சுக்கடா, உன்னை ரொம்ப கிண்டல் பண்ணியிருக்கேன். ஆனா, நீ சாதிச்சுட்டடா’’னு என்னைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டான். நான் சொன்னேன். ‘நீ மட்டும் கிண்டல், கேலி பண்ணாம இருந்தா, எனக்கு ஜெயிக்கணும்னு வெறி வந்திருக்காது. இந்த அளவு உயர்ந்திருக்கமாட்டேன்’னு நான் சொன்னதும் இரண்டு பேர் கண்களிலும் கண்ணீர்’’ என்று, அந்தச் சம்பவத்தைச் சொல்லும்போது டி.ராஜேந்தர் கண்களில் மீண்டும் கண்ணீர். உணர்ச்சிக் கண்ணீர்..

குமுதம்.